எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தங்களுக்கும் ஒரு கூட்டமைப்பு உருவாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
“..எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நமக்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாகவுள்ளது. அதனை தெளிவாகக் கூறுகிறோம். பல சுற்றுக்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. அதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொஹட்டுவ ஒன்றிணைவது தொடர்பில் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை. நான் ஜனாதிபதியாக இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அவ்வாறு இருக்கும் போதே என்னை நாலாபுறம் வைத்து இவர்கள் தாக்கினார்கள், அவமானப்படுத்தினார்கள். இப்போது ரணில் விக்கிரமசிங்க பொஹட்டுவ உடன் ஒன்று சேர்ந்தால் அதை எவ்வாறு கையாள்வார்கள் என நமக்கு காணக்கூடியதாக இருக்கும்..
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி பொதுஜன பெரமுனவிற்கு பிரதமர் பதவி இல்லாது போகும். என்னை அவமானம் செய்த, என்னுடைய பொதுமக்களுக்கான வேலைத்திட்டங்களுக்கு அன்று தடங்கல்களை ஏற்படுத்தியோர் இன்று நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.. அவர்களுக்கு இறுதியில் ஜனாதிபதிப் பதவியோ பிரதமர் பதவியோ இல்லை..”