உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயார் என முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி கல்பாய பிரதேசத்தில் (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துரைக்கையில்;
மஹிந்தானந்த அளுத்கமகே, இவ்வாறானதொரு தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெரும்பான்மையான மற்றும் இடதுசாரி முன்னணியின் பெரும் குழுவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து ஒரே தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கொவிட் தொற்றுநோய்களின் போது உள்நாட்டு சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்ததால், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை எழுந்ததாகவும், அந்தப் பிரச்சினையால், நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுப்பதற்காக செயற்பட்டு வருவதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கூறி வந்த நிலையில், தற்போது மீண்டும் உள்ளூராட்சி தேர்தலை நடத்த நாடு முழுவதும் தொடர் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பேச்சு பாணி சுவாரஸ்யமாக இருந்தாலும், நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் அந்தக் கட்சித் தலைவரிடமோ அல்லது அந்தக் கட்சியிடமோ இல்லை.
எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் தமது கட்சி செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.