ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிர்வாகம் (Ground handling) இணைந்து எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்குவதா அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான வழிகாட்டல்களை திறைசேரியின் குழுவொன்று வழங்கும் என்றும் அதன் பின்னர் அமைச்சரவை இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பதாக நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தினார்.
பெருந்தொகையில் புரளும் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய அமைச்சர், நிறுவனத்தை மறுசீரமைப்பதை தேசிய மக்கள் சக்தி மட்டுமே எதிர்க்கிறது என்றார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளதாகவும், விமான சேவைக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் 51 சதவீத பங்குகளை அரசாங்கத்திடம் வைத்து விமான நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது என்றார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறைவேற்று அதிகாரி ஒருவருக்கு எயார்பஸ் நிறுவனம் வெகுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், சம்பவம் தொடர்பில் எயார்பஸ் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு வசூலிப்பதாக நம்புவதாகவும், இங்கிலாந்தில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்திடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.