போதைப் பொருள் பரவல் காரணமாக அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நாட்டில் இளம் சமுதாயம் என்ற ஒன்று மீதமிருக்காது எனவும் நாட்டை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பிரபல பாடசாலைக்குள் ஐஸ் என்ற போதைப் பொருள் பரவியுள்ளது. பெண்கள் பாடசாலைகளுக்குள் இந்த போதைப் பொருள் சென்றுள்ளது.
பாடசாலைகளின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படும் என்று கடந்த காலங்களில் அவற்றின் பெயர்களை வெளியிடுவதில்லை.
ஆனால் தற்போது அச்சப்பட தேவையில்லை அனைத்து பாடசாலைகளின் பெயர்களையும் வெளியிட முடியும் அந்த அளவுக்கு ஐஸ் போதைப் பொருள் பாடசாலைகளுக்குள் பரவியுள்ளது.
பெண் மாணவிகளும் ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுள் காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்பது மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவாக உள்ளது என்பதை நான் அன்று அது தொடர்பான சட்டமூலத்தை சமர்பிக்கும் போது தெரிவித்திருந்தேன்.
ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துருக்கு இரண்டு வருடங்களில் அவர்களின் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்து, அவர்கள் இறந்து விடுவார்கள். நாட்டில் சுமார் 5 லட்சம் இளைஞர், யுவதிகள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்காது போனால், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக மாறுவதை தடுக்க முடியாது. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டை முற்றாக அழிக்கும் சதித்திட்டம், சூழ்ச்சி தற்போது முன்னெடுக்கப்படுகிறது. உண்மை நிலவரம் என்னவென்று தெரியாது, பாடசாலைகளுக்கு இடையில் ஐஸ் போதைப் பொருளை விநியோகிக்க வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அந்த போதைப் பொருள் இலவசமாக விநியோகிப்பதாக புலனாய்வு தகவல்கள் இருக்கின்றன.
எமக்கு நாடு இருப்பதால் பயனில்லை, இந்த தாய் நாட்டை பாதுகாக்க இளைய சமுதாயம் இருக்க வேண்டும்.
இதனால், அனைத்தையும் விட போதைப் பொருள் தடுப்புக்கு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். நாங்கள் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியாக மற்றவர்கள் செய்த நன்மை, தீமைகளை பற்றி பேசுகிறோம்.
தினமும் நாடாளுமன்றத்தில் ஒருவருக்கு ஒருவர் தூற்றிக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினை தீராது. நாடாளுமன்றம் என்பது டைட்டானிக் கப்பல் போன்றது, அனைத்து இடங்களிலும் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.எப்போது மூழ்கும் என்று தெரியாது,
மூழ்கும் போது நாட்டுடன் மூழ்கும். இதனால், நாடாளுமன்றத்தில் இரண்டு பக்கமாக பிரிந்து சண்டையிடும் காலம் இதுவல்ல. நாட்டுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து, போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
போதைப் பொருள் பாவனையில் இருந்து இளம் சமுதாயத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.