கொழும்பு துறைமுகத்தை ஜா-எல வரை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பில் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், காலாவதியான பொருளாதார முறைமைகளுக்குப் பதிலாக 2050ஆம் ஆண்டை எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜன் துறையில் இலங்கை அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், சூரிய சக்தி தொழிற்துறையை விட அதிக ஆற்றலைக் கொண்ட பசுமை ஹைட்ரஜனில் தனியார் துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காணிச் சட்டங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு தற்போதுள்ள சட்டங்களை முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடிய வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையை பாரிய விநியோக மையமாக இலகுவாக மாற்ற முடியும் எனவும், அதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முதலாவதாக, கொழும்பு துறைமுகத்தை ஜா-எல வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இரண்டாவதாக, துறைமுக அபிவிருத்திக்காக கொழும்பு நகரின் 30 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திக்காக வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த திட்டத்தில் முதலில் ஜப்பான் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார்.
எவ்வாறாயினும், தற்போது சிறிய துறைமுகத்தை பராமரிப்பது பொருளாதாரத்திற்கு பெரிய சேவையை செய்யாது என்றும், துறைமுகத்தை மூலோபாய ரீதியாக மேம்படுத்தி இலங்கையை ஒரு பெரிய விநியோக மையமாக மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.