கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘வனத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் வடக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் உரையாற்றி இதுவரை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவர் இவ்விடயத்தில் எம்முடன் இணங்குவார் என எதிர்பார்க்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்டம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் யானை மோதல் தாக்குதலினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, வவுனத்தீவு, செங்கலடி மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள், விளை நிலங்களுக்கு யானைகள் உட்புகுந்து பயிர்களை நாசம் செய்து, மக்களின் குடியிறுப்புக்களில் புகுந்து வீடுகளையும் உடைத்தெறிகிறது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் வன சேவையாளர்களுக்கு வனவளத்துறை தொடர்பான தொழினுட்ப ரீதியான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
பல ஆண்டு காலமபாக வனவளத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. வனவள அதிகாரிகளின் சேவை முழுமையாக செயற்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் பாரம்பரியமாக விவசாயம் காணிகளுகளை வனவளத்துறையினர் ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார்கள் ஆனால் மறுபுறம் மட்டக்களப்பு வாகரை பகுதியில் வனவளத்துறை திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் மண்நிரப்பி மண்மேடு உருவாக்கப்பட்டுள்ளது.
வனவளத்தறை இருவேறுப்பட்ட சட்டங்களை செயற்படுத்துகிறது. மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான மயிலன்தலை மேய்ச்சல் நிலப்பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்களை குடிமயமர்த்தியுள்ளார்.
நாட்டில் மோசடி நிறைந்த அமைச்சராக சுற்றாடல் துறை அமைச்சு காணப்படுகிறது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு எதிராக திணைக்களத்தின் அதிகாரிகள் குற்றச்சாட்டுள்ளார்கள். நாட்டின் மண்வளத்தை பாதுகாக்க வேண்டிய இந்த தலைவர் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
சூழல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பெருமிதமாக குறிப்பிடுகிறார். ஆனால் புவிசரிதவியல் திணைக்களம் சூழல் பாதிப்புக்கு பிரதான நிறுவனமாக காணப்படுகிறது.
ஆகவே புவிசரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். 15 நாட்களுக்கு காலவகாசம் வழங்குவேன். 15 நாட்களுக்குள் பதவி நீக்காவிடின் சுற்றுச் சூழல் தொடர்பில் சர்வதேச ஊடக சந்திப்பை நடத்துவேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மையங்களை அடையாளப்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுலா பயணிகள் எவரும் வருகை தரவில்லை.
ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பினரை மாத்திரம் இணைத்துக் கொள்ளாமல் எம்மையும், ஜனாதிபதி இணைத்துக் கொண்டால் உண்மை விபரங்களை அவருக்கு தெரிவிப்போம்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக கடன் மறுசீரமைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊழியர்மட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டேன். இது மிகவும் முக்கியமானது.
நான் இலங்கை மக்கள் சார்பாகவே சபையில் உரையாற்றினேன். ஆனால் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இவ்விடயத்தில் எனது டுவிட்டர் கணக்கை இணைத்து டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது.
20 ரில்லியன் வெளிநாட்டு கையிப்பை சீனா கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் சீனா முன்னிலையில் உள்ளது. 7.4 பில்லியன் டொலர்களை இலங்கை சீனாவிற்கு கடனாக வழங்க வேண்டும்.
22 மில்லியன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன்.
20 ரில்லியன் வெளிநாட்டு கையிருப்பை கொண்டுள்ள சீனா இலங்கையின் உண்மையான நண்பனாயின் எரிபொருள், மற்றும் உணவு பொருட்களை வழங்குவதை விடுத்த சீனா இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அதுவே உண்மையான ஒத்துழைப்பாகும்.
22 மில்லியன் இலங்கை மக்கள் இனம்,மதம் என்ற அடிப்படையில் வேறுப்பட்டு இருக்கலாம், ஆனால் நாடு எனும் போது ஒன்றிணைந்து செயற்படுவார்கள்.
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்ந்து கடன் வழங்கி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியள்ளது.
நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டா கோ கம போராட்டத்தை ஆரம்பிப்பதை போன்று கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும்.
அதற்கு நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என்பதை சீன அரசாங்கத்திற்கும், இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.