தொழில் விவகாரங்களில் முதலீடு செய்து அதிக பலன் தருவதாக கூறி பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை ஏமாற்றி 1.3 பில்லியன் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும் கசுன் பெரேரா ஆகிய மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (30) உத்தரவிட்டார்.
அந்த வழக்குகளின் ஏனைய சந்தேக நபர்களான பொரல்லாலே சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
திலினி பிரியமாலி மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக ஏழு முறைப்பாடுகள் தமது திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
திலினி பிரியமாலி துபாய் நாட்டில் வர்த்தக நிறுவனமொன்றை பதிவு செய்து மோசடியாக சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி வர்த்தகம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது. மற்றும் சர்வதேச பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.