சட்டவிரோதமான முறையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சார அமைச்சு மீண்டும் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டாள் செயலாளரின் ஆலோசனையின் பேரில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்க முடியாது என தெரிவித்த ஜனக ரத்நாயக்க, இந்த தீர்மானத்தை மின்சார அமைச்சு மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அனுமதி பெற்று அதனை எதிர்கொள்வதற்கான வழியை மின்சார சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின்சார அமைச்சினால் தேவைக்கேற்ப மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என தெரிவித்த ஜனக ரத்நாயக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எப்போதும் பொதுமக்களின் பக்கம் இருந்து தீர்மானங்களை எடுப்பதாகவும், அவர்கள் ஒடுக்கப்படும் வகையில் செயற்படுவதில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.