சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இப்ராஹிம் சத்ரான் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
இவர் 120 பந்துகளுக்கு முகங்கொடுத்து 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற கன்னி அரைச்சதம் இதுவாகும்.
மேலும், ரஹ்மத் ஷா 52 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
ரஹ்மத் ஷா ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 21ஆவது அரைச்சதம் இதுவாகும்.
இவர் 64 பந்துகளுக்கு முகங்கொடுத்து 02 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 09 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 295 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற நான்காவது அரைச்சதம் இதுவாகும்.
இவர் 83 பந்துகளுக்கு முகங்கொடுத்து 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், வனிந்து ஹசரங்க 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
வனிந்து ஹசரங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற நான்காவது அரைச்சதம் இதுவாகும்.
இவர் 46 பந்துகளுக்கு முகங்கொடுத்து 10 நான்கு ஓட்டங்கள், 02 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் பாரூக்கி 49 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், குல்பாடின் நைப் 34 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 13 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1- 0 என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை வகிக்கின்றது