ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றிலிருந்து அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2 வெற்றிப் புள்ளிகளை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு நியூஸிலாந்தும் இலங்கையும் சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (29) ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
இப் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இக் குழுவில் 3 போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டதால் இப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பெறும். இலங்கை வெற்றி பெற்றால் அவ்வணி 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறும்.
இக் குழுவில் தற்போது நியஸிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால், நிகர ஓட்டவேக அடிப்படையல் அந்த நான்கு அணிகளும் முறையே முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.
இலங்கையும் ஆப்கானிஸ்தானும் தலா 2 புள்ளிகளுடன் முறையே கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன.
அயர்லாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை, அடுத்த போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்டத்திலும் பந்துவிச்சிலும் இழைத்த தவறுகளால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்தால் அதன் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போகக்கூடும். எனவே நியூஸிலாந்தை வெற்றிகொள்வதற்கு சகலதுறைகளிலும் அதி சிறந்த ஆற்றல்களை இலங்கை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
இலங்கை விளையாடிய இரண்டு ப்பர் 12 சுற்று போட்டிகளிலும் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். மத்திய வரிசையில் பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க ஆகிய மூவரும் பிரகாசிக்கத் தவறிவருகின்றமை அணிக்கு மிகப் பெரிய பாதிப்பாகும். எனவே அவர்கள் மூவரும் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி கணிசமான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தால் அது இலங்கைக்கு மேலதிக அனுகூலமாக அமையும்.
இதேவேளை, இலங்கை அணியில் சிறந்த சுழல்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவ்வணி சவால்மிக்க அணி என ஊடக சந்திப்பின்போது நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீ குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கை சவால்மிக்க அணி என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் எப்போதும் அச்சுறுத்தல் விடுக்கக்கூடியவர்கள். அவர்களது போட்டிகளில் சுழல்பந்துவீச்சு பெரும் பங்காற்றியுள்ளது. அதுதான் இலங்கை அணியின் பலம்’ என அவர் கூறினார்.
‘இந்த (சிட்னி) ஆடுகளும் எவ்வாறு செயற்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது. எமது வீரர்கள் சில வருடங்களாக திறமையான சுழல்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டுவந்துள்ளனர். எனவே, இது எமக்கு சிறந்த போட்டியாக அமையும்’ என டிம் சௌதீ தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, தகுதிகாண் சுற்றிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மூவர் உபாதைக்குள்ளானது இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. கடைசியாக நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆரம்ப ஓவரில் 5ஆவது பந்தை வீசியவுடன் பினுர பெர்னாண்டோ உபாதைக்குள்ளாகி அரங்கைவிட்டு வெளியேறினார்.
அவருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் அசித்த பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே குழாத்தில் இணைந்துகொண்ட கசுன் ராஜித்த அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வேகப்பந்துவீச்சில் யார், யாரை இணைப்பது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என செய்தியாளர்களிடம் உதவிப் பயிற்றுநர் நவீட் நவாஸ் தெரிவித்தார்.
‘சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கு இலங்கைக்கு சாதகமான அரங்கு என நான் கருதுகிறேன். பல வருடங்களாக அப்படித்தான் இருந்துள்ளது. எனவே நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்’ என்றார் நவீட் நவாஸ்.
நியூஸிலாந்து அணியை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டபோது,
‘சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நியூஸிலாந்து அதிசிறந்த அணிகளில் ஒன்றாகும். அந்த அணியை உயரிய அணியாக நாங்கள் மதிப்பிடுகிறோம். ஆனால், உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெறும் குழுவில் எந்த அணியையும் இலகுவாக கருத முடியாது. அதற்கு நாங்கள் தாயராக இருக்கிறோம். எவ்வாறு விளையாடவேண்டும் என்பதையும் சரியாக புரிந்துகொண்டுள்ளோம். அரை இறுதிக்கு தெரிவாவதற்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்’ என்றார்.
இந்தப் போட்டியில் மத்திய வரிசை வீரர்கள் பிரகாசிக்க வெண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நடந்து முடிந்த போட்டிகளில் முன்வரிசை வீரர்கள் மாத்திரமே பிரகாசித்துவந்துள்ளதை நினைவு படுத்திய நவீட் நவாஸ், மத்திய வரிசையில் பானுக்க ராஜபக்ஷ, அணித் தலைவர் தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் திறமையாக துடுப்பெடுத்தாடுவது அவசியம் என்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் 3 ஓவர்களில் 53 ஓட்டங்களை வாரி வழங்கிய வனிந்து ஹசரங்க இந்தப் போட்டியில் சிறந்த வியூகங்களுடன் பந்துவீசவெண்டும்.
மறுபுறத்தில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை ஆரம்பப் போட்டியில் மண்கவ்வச் செய்த நியூஸிலாந்துக்கு ஆப்கானிஸ்தானுடனான 2ஆவது போட்டி கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியே கிடைத்தது. எனவே, இலங்கையுடனான போட்டியில் முழு புள்ளிகளையும் பெறுவதற்கு நியூஸிலாந்து கடுமையாக முயற்சிக்கும்.
நியூஸிலாந்தின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் டெரில் மிச்செல் அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
ஆகையால் நியூஸிலாந்தின் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசவேண்டும். அதுமட்டுமல்லாமல் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்களை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் புத்திசாதுரியத்துடன் எதிர்கொண்டு ஓட்டங்களைப் பெறவேண்டும். அப்போதுதான் இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித்த அல்லது அசித்த பெர்னாண்டோ.
நியூஸிலாந்து: டெவொன் கொன்வோய், பின் அலன், கேன் றிச்சர்ட்சன் (தலைவர்), டெரில் மிச்செல், க்லென் பிலிப்ஸ், ஜெம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட், லொக்கி பேர்குசன்.