பிலிப்பைன்ஸ் முன்னாள் குத்துச்சண்டை ஜாம்பவான் மேணி பக்கியாவ், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரொட்றிகோ டுட்டேர்ட்டேயின் ஆளுங் கட்சியிலுள்ள எதிர்தரப்பு ஒன்றினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்ற பின்னர், ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எட்டு பிரிவுகளில் உலக சம்பியனானவரும் பிலிப்பைன்ஸின் தேசிய ஹீரோவுமான பக்கியாவ், லாஸ் வேகாஸில் கியூப குத்துச்சண்டை வீரர் யோர்தேனிஸ் உகாஸிடம் தோல்வி அடைந்த சில வாரங்கள் கடந்த நிலையில், தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலில் 2010ஆம் ஆண்டு பிரவேசித்த பக்கியாவ், பின்னர் செனட் சபை உறுப்பினராக தெரிவானார்..
42 வயதான பக்கியாவை பெருந்தன்மைக்காகவும் வறுமைக்கோட்டை கடந்து வந்து உலகின் மிகச் சிறந்த மற்றும் செல்வந்த குத்துச்சண்டை விரர்களில் ஒருவராக உயரிய நிலையை அடைந்தமைக்காகவும் பிலிப்பைன்ஸ் மக்கள் போற்றுகின்றனர்.
2022 ஜனாதிபதி தேர்தலில் டுட்டேர்ட்டேயின் புதல்வி சாராவை பக்கியாவ் எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.