எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்து நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரியுள்ளது.
இலங்கை கொவிட் பரவலில் சிவப்பு வலையத்தில் உள்ளதாகவும் இது பச்சை வலையமாக மாறும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை இடம்பெறும் கூட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வயதெல்லை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.