இந்தோனேஷியாவின் தலைநகரம் ஜகார்த்தாவில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிற மேல்மட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை கவனக்குறைவாக கையாண்டதே காரணம் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கவேண்டும் என்பது உட்பட காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ல் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு நிலவும் நகரம் என்று ஜகார்த்தா தரவரிசையில் உள்ளடக்கப்பட்டதையடுத்து நகரவாசிகள் 32 பேர் தலைநகரின் காற்று மாசு குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நகரின் மோசமான காற்று மாசுபாடு காரணமாக நகர மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதிபர் விடோடோ, ஜகார்த்தா ஆளுநர் ஆகியோர் மீதும் காடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேசிய காற்றுத் தர நிலையை மேம்படுத்தும்படி மாவட்ட நீதிமன்றம் விடோடோவுக்கு உத்தரவிட்டதுடன், வாகனப் புகைப் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை மாகாண அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.