கிரிக்கெட்டுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல் இலங்கையின் ஏனைய விளையாட்டுக்களையும் உலகின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதில் ஊடகங்கள் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.
“ஒரு தலைவராக, உலகில் எப்போதும் முதலிடத்தில் கிரிக்கெட் இருப்பதாக நான் நம்புகிறேன். எங்கள் வீரர்கள் அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் உலக அரங்கில் நன்றாக விளையாடியுள்ளனர்.
எங்கள் வலைப்பந்து அணியும் அப்படித்தான். அவர்கள் நன்றாக விளையாடினர். ஊடகங்கள் மற்றவற்றை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
அந்த இரண்டு விளையாட்டுகளைத் தவிர, இலங்கையில் உள்ள மற்ற விளையாட்டுகளுக்கு இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்” என்று ஆசியக் கிண்ணத்தை வென்ற பிறகு போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளிலும் முதலிடம் பெற வேண்டும். ஆனால் ஊடகங்கள் எப்போதும் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே பேசுகின்றன.
மற்றைய விளையாட்டுகளை பற்றி பேசி வளர்த்தால் பெரிய உந்துதலாக அமையும். ஆசியக் கிண்ண வெற்றியானது, இலங்கை கிரிக்கெட்டுக்கு நீண்ட கால மாறுதல் கட்டத்தை கடந்து வருவதற்கு ஒரு படியாக அமையும் என ஷானக்க மேலும் தெரிவித்தார்.
“இரண்டு – மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட, அணி நன்றாக கிரிக்கெட் விளையாடியது, ஆனால் வெற்றிக்கான காரணி இருக்கவில்லை” என்று அவர் கூறினார்.
“இது எங்கள் கிரிக்கெட்டில் திருப்புமுனையாக இருக்கலாம், ஐந்து-ஆறு ஆண்டுகள் தொடர்ந்தும் விளையாட முடியும் என்பதற்கான அறிகுறியே இதுவென ஷானக்க கூறினார்.