follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுஊட்டச்சத்து குறைபாடு: யுனிசெப் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு

ஊட்டச்சத்து குறைபாடு: யுனிசெப் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு

Published on

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடும் யுனிசெப்பின் (UNICEF) அண்மைய அறிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.

சுகாதார அமைச்சில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இந்த அறிக்கையை தொகுக்க யுனிசெப் பயன்படுத்திய தரவுகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போசாக்கின்மை நிலை 13.2 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், யுனிசெப் அறிக்கை நீண்ட கால தரவுகளின் அடிப்படையில், சிறுவர்களின் ஊட்டச் சத்து குறைபாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கணக்கிடுவதற்கு, வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கான எடை மற்றும் வயதுக்கேற்ற நிறை ஆகிய மூன்று காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஆனால் யுனிசெப் தனியாக உயரத்துக்கேற்ற நிறையை மட்டும் பயன்படுத்துவதன் அடிப்படையில் தவறான அறிக்கையைத் தயாரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

யுனிசெப் ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு வருடங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்ததாகவும், இலங்கைக்கான 1995 முதல் 2019 வரையிலான நீண்ட கால ஆய்வுகளின் தரவுகள் ஒப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

“மற்ற நாடுகளைப் போலல்லாமல், இலங்கையில் சிறுவர்கள் உடல் மெலிவதால் மரணம், மரஸ்மஸ் அல்லது குவாஷியர்கோர் போன்ற கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அபாயம் இல்லை.

நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாட்டைக் கருத்தில் கொள்ளும்போது, ஆபிரிக்க நாடுகளை விட இலங்கை சிறந்த நிலையில் உள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவை கணக்கிடுவதற்காக, சுகாதார அமைச்சு கிராமப்புற தரவு, சமூக பின்னணி மற்றும் சுகாதார தரவு மற்றும் குடும்ப சுகாதார அலுவலகங்கள் அனைத்து தொடர்புடைய தரவுகளை சேகரித்து ஊட்டச்சத்து குறைபாடு நிலையை கணக்கிடுகிறது என்று அதிகாரி விளக்கினார்.

அடிப்படை ஆண்டு இல்லாத யுனிசெப் அறிக்கை தவறானது. “ஆப்பிரிக்க நாடுகளைப் போல நம் நாட்டில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இல்லை. சிறுவர்களின் வயதுக்கேற்ற உயரத்தின் அடிப்படையில் முதல் 150 நாடுகளில் நமது நாடு 70 ஆவது இடத்தில் உள்ளது” என்றார்.

“ஆனால் எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்காக, கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட அவசர ஊட்டச்சத்து திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.

அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளின் போஷாக்கு தேவைகள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம், இது தொடர்பில் சுகாதார அமைச்சு முழுப்பொறுப்புடையது எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த யுனிசெப் இன் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் ஜோர்ஜ் லரி அட்ஜே தெற்காசியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள தெற்காசிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்களின் உணவுப்பழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நாளுக்கு நாள் உணவுப் பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டார்.

இதன்படி, இலங்கையில் பல குடும்பங்கள் தினசரி உணவைத் தவிர்ப்பதுடன், சத்தான உணவைப் பெறாமல் இருப்பதும், உணவுப் பொருட்களை வாங்க முடியாமையும் முக்கியக் காரணம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் சிறுவர்களின் போசாக்கு குறைபாடு தொடர்பில் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கை நிராகரிக்கப்பட்டால், அது தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை சுகாதார அமைச்சு சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினர் வெவ்வேறு புள்ளிவிபரங்களை முன்வைத்தாலும் இந்நாட்டு மக்கள் உணவு விநியோகத்தில் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதை தெளிவாக அவதானிக்க முடிவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் மருந்துகளை வழங்கும் செயல்பாட்டில் எந்த அரசியல் செல்வாக்கும் இருக்காது

இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, பற்றாக்குறை அல்லது தாமதங்கள் இல்லாமல்...

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு – அரசிற்கு பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

ஹிக்கடுவ - குமாரகந்த பகுதியில் இன்று(03) 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து...