கடந்த மே மாதம் 9ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையால் சொத்துக்கள் அழிக்கப்பட்ட அமைச்சர்கள் தமது சொத்துக்களின் பெறுமதியை இரட்டிப்பாக்கி நட்டஈடு பெற முயற்சிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு உச்சபட்ச மதிப்பீட்டைச் சமர்ப்பித்து இழப்பீடுகளைப் பெறுவதற்கு சில அரசியல்வாதிகளின் முயற்சிப்பதால் மதிப்பீட்டு அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமது ஒரு வீடு இடிக்கப்பட்ட நிலையில், இரண்டு வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறி, ஐந்து அமைச்சர்கள் நட்டஈடு மற்றும் வீடுகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும், இன்னொரு அரசியல்வாதி தனக்கு ஏற்பட்ட நஷ்டம் நூறு கோடி என்று கூறி நஷ்டஈடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த நாளிதழ் தெரிவிக்கின்றது
இதுதவிர, இல்லாத வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக போலிப் பட்டியல் தயாரித்து நஷ்டஈடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அரசியல்வாதிகள் தங்களுடைய வீடுகளில் பெருமளவு தங்கம், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக மதிப்பீட்டு அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.
சொத்துக்களை அழித்த அரசியல்வாதிகள் சமர்ப்பித்துள்ள பல மதிப்பீட்டு அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என இந்த வழக்குகளை விசாரிக்கும் பொலிஸ் குழுக்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசியல்வாதிகள் எவ்வாறு இவ்வளவு சொத்தை சம்பாதித்தார்கள் என்பது குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று புலனாய்வுக் குழுக்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக அந்த அரசியல்வாதிகள் முன்வைக்கும் சொத்துமதிப்பீட்டு அறிக்கையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற கவலைக்கிடமான சம்பவங்களின் பின்னர், 76 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மக்களால் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இந்த வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்த பெறுமதியான சொத்துக்களையும் வன்முறையாளர்கள் சிலர் கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.