தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சவினரை அரசியலுக்கு வரவழைப்பதற்காக தரை விரிப்பு விரிக்கப்படுவதாகவும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடு இழந்த நில உரிமையையும் பணத்தையும் ராஜபக்ச அரச குடும்பம் மீளப் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோருவதாகவும், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மக்களின் பொதுச் சொத்துக்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதாகவும், மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தேர்தல் தொகுதி அகர கூட்டம் நேற்று (04) நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தொகுதியின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜிதமுனி சொய்சா இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு, இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ராஜபக்சவினர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசாங்கம் ரத்துபஸ்வல கொலைக் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயல்வதாகவும், ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்நாட்டு இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மிலேச்சத்தனமான முறையில் நசுக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மீதான அடக்குமுறையை எதிர்க்கட்சி என்ற வகையில் முழுமையாக எதிர்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.