ரஷ்யாவிற்கு சொந்தமான Aeroflot விமானம் இலங்கையிலிருந்து வௌியேறுவதை தடுக்கும் வகையில் அண்மையில் உத்தரவு பிறப்பிப்பதற்கு காரணமாக இருந்த வழக்கை, வழக்கு கட்டணத்திற்கு உட்பட்டு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மற்றும் பிரதிவாதி தரப்பான ரஷ்ய விமான நிறுவனம் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி ரஷ்ய விமானம் வௌியேறுவதற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, ரஷ்யாவின் இலங்கைக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், இலங்கைக்கு ஈடு செய்ய முடியாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கடந்த 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனால் இந்த நிலைமையை சீர்செய்வதற்காக வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யுமாறும் அவர் மன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம், இத்தகைய தடையுத்தரவை பிறப்பிப்பதற்கு நீதிதமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், இலங்கையின் பொதுச்சட்டத்தில் அது செல்லுபடி ஆகாது எனவும், இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் அது முரணானது எனவும் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த விடயம் நியாயாதிக்க நடவடிக்கையுடன் தொடர்புடையது எனவும் கூறியுள்ளார்.
இடைக்கால தடையுத்தரவிற்கான வேண்டுகோளை தாம் மீளப்பெறுவதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை அறிவிக்குமாறு முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு வர்த்தக மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாததால் , 05 மில்லியன் டொலர் வழக்கு கட்டணத்திற்கு உட்பட்டு , வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வழக்கின் பிரதிவாதி தரப்பான Aeroflot விமான நிறுவனம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அயர்லாந்து நிறுவனம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி, ரஷ்யாவின் Aeroflot விமானம் இலங்கையிலிருந்து வௌியேறுவதை தடுக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர் சட்ட மா அதிபர் முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தடையுத்தரவை இடைநிறுத்துவதற்கு, வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.