பாராளுமன்றம் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், இன்றும் நாளையும் (05) நாளை மறுதினம் (06) பாராளுமன்றம் கூடும் என அண்மையில் நடைபெற்ற பாராமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களுக்காக பாராளுமன்றத்தில் கேட்கப்படாத 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக இன்று மு.ப 10.00 மணி முதல் பி.ப 3.30 மணி வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 05ஆம் திகதி மு.ப 10. 00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, 1979ஆம் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2270/59 ஆம் இலக்க மற்றும் 2280/32 இலக்க வர்த்தமானி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம், 2020ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 08ஆம் பிரிவின் கீழான கட்டளை என்பவற்றை விவாதத்தின் பின்னர் நிறைவேற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள், 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ்) விதிக்கப்பட்ட 2282/21 ஆம் இலக்க மற்றும் 2282/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன அன்றையதினம் விவாதத்தின் பின்னர் சபையில் அனுமதிக்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கும், பி.ப 4.50 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை 6ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் பி.ப 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன், தற்போது நிலவும் சிரமங்கள் காரணமாக பாராளுமன்றம் கூடாத நாட்களில் குழுக் கூட்டங்களை ஒன்லைன் மூலம் நடத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.