எதிர்வரும் பெரும்போகத்திற்கு நீர் வழங்க 20 குளங்கள் புனரமைக்கப்படுகின்றன எனவும் அதில் தற்போது 11 குளங்கள் தண்ணீரை வழங்கக் கூடிய அளவுக்கு புனரமைக்கப்பட்டுள்ளன எனவும் மிகுதி 9 குளங்களின் புனரமைப்புப் பணிகளின் இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளன என்றும் நகரஅபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடையே நேற்றுமுன் தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள உணவுப் பிரச்சினைக்கு துரிதமான தீர்வு ஒன்று எட்டுவதற்கு அரசாங்கத்தின் விவசாயப் புரட்சி வேலைத்திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் கீழ் பாழடைந்த 5000 கிராமியக் குளங்களை தூர்வாரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் பதுளை, மொனராகலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பதுளையில்.இருந்து 13 குளங்களும் மொணராகலை மாட்டத்திலிருந்து 6 குளங்களும், குருணாகல் மாவட்டத்தில் இருந்து ஒரு குளமும் தெரிவு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பயிர்செய்யப்பட்ட ஏறக்குறைய 600 ஏக்கர் வயல்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் குருணாகல், அநுராதபுர வீதியின் இரு புறத்திலுமுள்ள 9 குளங்களும் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வேலைத் திட்டத்தில் குளங்களை புனரமைப்பது மட்டுமல்லாது வீதியில் இரு புறங்களும் அழகுபடுத்தப்படும் வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 268 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இந்த வருடத்திற்குள் 50 குளங்களை புனரமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு 500 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பதுளையில் இருந்து 42 குளங்களும் மொணராகலையில் இருந்து 14 குளங்களும் கண்டியில் இருந்து 6 குளங்களும் புனரமைக்கப்படவுள்ளதுடன் இன்னும் பல குளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போதுள்ள தண்ணீரின் கொள்ளளவை அதிகரிப்பதும் இதன் இலக்குகளில் ஒன்று என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அதற்காக குளங்களை தூர்வார வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அவ்வாறு தூர்வாரப்பட்ட குளங்களின் கட்டுக்களும் திருத்தப்பட்டு குழாய் மற்றும் கால்வாயிலும் திருத்த வேலைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் குளத்தைச் சுற்றி மரங்கள் நடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக உரம், நீர் உள்ளிட்ட ஏனைய வசதிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. விளைச்சலுக்கு நியாயமான விலையொன்றைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனூடாக விவசாயத்தை ஊக்கப்படுத்தி, உணவுச் சிக்கலைத் தீர்க்க.முடியுமாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். பெறப்படுகின்ற நெல் விளைச்சலை விவசாயிகளே அரிசியாக மாற்றி விற்பனை செய்வது அதிக இலாபத்தைத் தரும் என்பதால் விவசாயிகள் அது பற்றி கவனம் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்னாயக்க, இலங்கை காணி அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய, அந்தக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.