கொவிட் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, “1904” குறுஞ்செய்திச் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய, கொவிட் தொற்றாளர்கள் கீழ்வரும் தகவல்கள் தொடர்பில் அதன் குறியீட்டை உள்ளீடு செய்வதன் மூலம் 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் நிலைமைகள்:
A-சுவாசிப்பதில் சிக்கல் நிலை
B-காய்ச்சல் நிலை
C-எவ்வித அறிகுறியும் இல்லை
உதாரணமாக: சுவாசிப்பதில் சிக்கல் நிலை கொண்ட தொற்றாளர் ஒருவர், A<இடைவெளி>வயது<இடைவெளி>தே.அ.அ.<இடைவெளி>முகவரி
என குறிப்பிட்டு, 1904 இற்கு குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும்.
குறுஞ் செய்தி மூலம் கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில், கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால், உரிய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான வைத்தியர் குழாம் அனுப்பி வைக்கப்படும்.
கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் மேல் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம்திகதி முதல் இந்த குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.