முஸ்லிம் சமூகத்தை தலைமை மூலமாக வழிநடத்தும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையில் தலைமை முதல் அதன் கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று பல தரப்பிலும் பல மட்டங்களிலும் ஜம்இய்யதுல் உலமா சபைக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (18) சனிக்கிழமை கண்டியில் நடத்துவதற்கான ஆயத்தங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜம்மியதுல் உலமா சபையின் தலைமைப் பதவியில் மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேவேளை மிக நீண்ட காலமாக ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி இருந்து வந்துள்ள நிலையில் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி, புதிய நிர்வாகத்திற்கு இடமளிக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் தொடுக்கப்பட்டு வருகின்றன.
அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியின் தலைமைத்துவமானது இரண்டு தசாப்தங்களை நெருங்கி வருகிறது. இவரின் பலயீனமான தலைமைத்துவம் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள், இன்னல்களின் போது சரியாக பயன்படத் தவறியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
முஸ்லிம் சமூகத்தை சரியாக வழிநடாத்த தவறியமை, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் இருப்பதன் காரணமாக புதிய தலைமைக்கு றிஸ்வி முப்தி இடம் கொடுக்க வேண்டும் என்று ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பல பக்கங்களிலும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் முஸ்லிம் சமூகத்தின் வர்த்தகர்கள், கல்வியலாளர்கள், தொழிலதிபர்கள் ஜம்இய்யதுல் உலமா சபையையும் றிஸ்வி முப்தியையும் சந்தித்து புதிய தலைமைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். இதற்கு திருப்தியான பதில்கள் அங்கிருந்து கிடைக்கவில்லை என அவரை சந்தித்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் நாளை சனிக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி பதவி விலகுவாரா? மாற்றத்திற்கான வழியை உருவாக்குவாரா? அல்லது தேர்தல் முடிவு முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடந்தால் ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்குமா? என்ற கேள்விகள் இருக்கின்றன.
எவ்வாறாயினும் சமூகத்தின் நலனுக்காகவும், நல்ல மாற்றத்திற்காகவும் வழிவிட்டு ரிஸ்வி முப்திக்குப் பதிலளிக்க இன்னும் பலம்பொருந்திய தலைமைத்துவத்தைத் தெரிவுசெய்வது, இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரதும் கடமையாகும். அத்துடன் சபை அங்கத்தவர்கள் நாளைய வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கெடுத்து சரியான, உறுதியான தலைமைத்துவத்தைத் தெரிவுசெய்வதில் பங்காற்றுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.