தற்பொழுது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் பஞ்சம் ஏற்படாது என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத்தெரிவித்த அமைச்சர் வழமையாக ஒருமாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆக, தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய சுப்பர் மார்க்கெட்களில் அரிசியினை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
தான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன் 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தற்போது அது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மக்கள் வீணாக அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.