ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர், கலாநிதி பி.பி. ஜயசுந்தர மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இன்று(08) பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் தொடர்பில் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அதன் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம், இன்று(08) பிற்பகல் 2 மணிக்கு அரசாங்கக் கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் முன்னிலையாக குறித்த தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அதனைத்தவிர அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட பலரும் இன்று(08) அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.