இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நிலையில் தனது முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 506 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதன்படி, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி போட்டியின் இறுதி நாளான இன்று அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் 52 ஓட்டங்களையும், மொசாடெக் ஹொசைன் 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் அசித பெர்ணான்டோ 6 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
அதன்படி, 29 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஓசத பெர்ணான்டோ 21 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 7 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
இதற்கமைய, 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.