பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
இதன்போதே கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கோட்டா கோ கம“ போராட்டத்தை தவிர்த்து ஏனைய பகுதிகளில் இடம்பெறும் வன்முறை, கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல் குறித்து துரித தீர்மானத்தை முன்னெடுக்காவிடின் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால திட்ட யோசனைகளை நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை நிவர்த்தி செய்ய தேசிய மக்கள் சக்தி பின்வரும் பிரச்சினைகள் குறித்த தீர்மானத்தை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி,
1. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும்.
2. தற்போது அமைச்சர் இல்லாத பட்சத்தில், சபாநாயகர் செயல் தலைவராக செயற்படுவார்.
3.தற்போதைய அரசாங்கமும் தற்போதைய நாடாளுமன்றத்தின் அமைப்பும் மக்கள் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதால் தற்போதைய நாடாளுமன்றத்தில் எந்த மாற்றத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் புதிய ஆணையுடன் ஆறு மாதங்களுக்குள் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
4. இதற்கிடையில் தற்காலிக ஆட்சி அமைப்பாக உடனடியாக தேர்தலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.