நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்குவதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதற்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பஸ்கள் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்துக்கு நான்கு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் அதன் பின்னரும் அரசாங்கம் பதவி விலகவில்லையெனில் 11ஆம் திகதி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், புகையிரத சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.