இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வளர்ப்புப் பிராணிகள் துன்புறுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரும் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வளர்ப்பு யானைகளின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான சில விதிமுறைகளை இலங்கை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதிய சட்டத்தின் பிரகாரம், வளர்ப்பு யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பல எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானை பாகன்கள், யானைகளை பராமரிக்கும் போது, மது அருந்துவதற்கும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு யானைகளின் மரபணு பதிவுடன், அடையாள அட்டைகளை ( இடது, வலது புறங்களுடன் நான்கு நிழற்படங்கள், தலை மற்றும் தண்டு மற்றும் பின்புறம் முழு வால் தெரியக்கூடியவாறு.) உரிமையாளர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும், வளர்ப்பு யானைகளை நாளாந்தம் இரண்டரை மணி நேரம் குளிக்க செய்வதும் கட்டாயமாக்கப்படவுள்ளது.
சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் யானைகள் மீது, நான்கு பேருக்கு மேல் சவாரி செய்ய அனுமதிக்க முடியாது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வளர்ப்பு குட்டி யானைகளை வேலைகளுக்காக பயன்படுத்த முடியாது என்பதுடன், களியாட்டம் அல்லது நிகழ்வுகளுக்கு யானைகளை அழைத்து செல்லும் போது, தாய் யானைகளிடமிருந்து குட்டி யானைகளை பிரிக்க கூடாது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணிநேர வேலை என்பதுடன், இரவு நேரங்களில் வளர்ப்பு யானைகளை வேலைக்கு அமர்த்த கூடாது
கர்ப்பிணி யானைகளிடம் வேலை வாங்க முடியாது என்பதுடன், கர்ப்பிணி யானைகளுக்கு இரண்டு வருட மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
வளர்ப்பு யானைகள் தொடர்பிலான இந்த திட்டங்களை விரைவில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமல்வீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.