பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இறுதியாக கூடிய பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.
பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கூடுவதுடன் குறித்த தினங்களில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு கடந்த வாரம் கூடி தீர்மானித்திருந்தது.
இருந்தபோதும் தற்போது அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.
என்றாலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுமா என்பது சந்தேகமாகும் .
ஏனெனில் அமைச்சர்கள் பதவி விலகி இருப்பதுடன் 4அமைச்சர்கள் மாத்திரமே நியமி்க்கப்பட்டிருக்கின்றனர்.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இல்லாமல் பாராளுமன்ற விவாதத்தை கொண்டுசெல்வது சாத்தியமில்லை.
அதனால் இன்றைய தினம் பாராளுமன்றம் கூடிய பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று, அதன் பின்னரே பாராளுமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு கொண்டுசெல்வது என தீர்மானிக்கப்படும் என தெரியவருகின்றது.
இதேவேளை, பாராளுமன்றம் இன்றைய தினம் கூடிய பின்னர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளில் சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சி பக்கம் வந்து அமர்ந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறு இருக்கின்றபோதும், அரசாங்கம் பதவி விலகவேண்டும் என மக்கள் வீதிக்கிறங்கி போராடிக்கொண்டிருக்கையில் அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவி மடு்க்காமல் இருப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.