மின்சாரம், எரிவாயு, பால் மா, ஔடதங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 4 ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
காமினி அமரசேகர, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜூன் ஒபேசேகர உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்றி பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, சட்டவாட்சியை சீர்குலைக்கும் நிலை தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, விசேட நடவடிக்கையாகக் கருதி மனுக்களை குறுகிய காலப்பகுதியில் பரிசீலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தட்டுப்பாடின்றி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொடுக்காமையினால், அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை, மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள், மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உள்ளிட்ட 42 தரப்பினர் மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி G.G. அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கலாநிதி கே.கணகீஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா மற்றும் சட்டத்தரணி சுரேன் ஞானராஜா, சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமான்ன உள்ளிட்டோர் மனுக்கள் சார்பில் ஆஜராகினர்.
சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே முன்னிலையானார்.