தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெற்று தண்ணீர் போத்தல்கள், வெற்று குளிர்பான போத்தல்கள் மற்றும் முகக்கவசம் முதலானவை சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த உக்காத பொருட்களால் நிலம் மற்றும் நீரிலுள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக சுற்றாடல் துறை அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உயிரினங்களின் நலனை பொருட்படுத்தாமல், திறந்த வெளியில் இவற்றை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த செயல்முறையை எளிதில் நிறுத்திவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் இது போன்று சுமார் 10 இலட்சம் உக்காத பொருட்களை மக்கள் வீசுவதனால் நிலம் மாசுபடுவது மட்டுமல்லாமல் ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கடலில் வாழும் பெறுமதிமிக்க கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் பவளப்பாறைகள் அழிவடைகின்றன எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தடுப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தனியார் துறை சமூக சேவை நிறுவனங்களுடன் இணைந்து இந்த குப்பைகளை அகற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், முக்கிய நகரங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை பயன்படுத்தவும் ஒரு சிறப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உக்காத பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்கான புதிய இடங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.