இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் (Muhammad Saad Kattak ) இன்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இதன்போது, கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ஒருதொகை வைத்திய உபகரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொவிட்-19 சவாலை வெற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இவ்வாறு வழங்கப்பட்ட வைத்திய உபகரணத் தொகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாசக் கருவிகள் (ventilators), 150 C-PAP செயற்கை சுவாசக் கருவிகள் என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிராந்திய மட்டத்தில் ஒன்றிணைந்து கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு பங்களிக்கும் விதமாக பாகிஸ்தான் சார்க் கொவிட்-19 அவசர உதவியின் (Pakistan’s SAARC COVID-19 emergency assistance ) கீழ் இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இந்நன்கொடைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.