இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த விஜயமாமனது இதுவரையில் உறுதிப்படுத்தப்பட வில்லை என தெரிவித்த டெல்லி செய்தி மூலங்கள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டன.
குறித்த திகதியில் ஓரிரு தினங்கள் முன்பின் ஆனாலும் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மூலங்கள் மேலும் குறிப்பிட்டன.
வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழுவின் கொழும்பு வருகை பிரதமர் மோடியின் விஜயத்திற்கான முன்னேற்பாடுகளை மையப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்திய உட்பட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதுடன் உத்தியோகப்பூர்வ அழைப்பிதழ்களையும் கையளித்துள்ளது.
குறிப்பாக அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் தொடர்பில் கலந்துரையாடி உத்தியோகப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர்.