HomeTop newsநந்தா மாலினியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - பிரதமர்

நந்தா மாலினியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது – பிரதமர்

இலங்கை இசைத்துறையின் பொற்காலக் குரலாகப் போற்றப்படும், நந்தா மாலினியின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவை தொடர்ந்து, பிரதமர் இன்று (21) பாராளுமன்றில் வௌியிட்ட அனுதாபச் செய்தியின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஏறக்குறைய எட்டு தசாப்தங்களாக தமது தனித்துவமான பாடும் ஆளுமையினால் இந்நாட்டின் இசையையும் கலாசாரத்தையும் வளர்த்த நந்தா மாலினி அம்மையாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகுந்த கவலையடைந்தேன்.

அவரது பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல கட்டங்களைக் கடந்த ஒரு ரசிகையாக, அவரது இழப்பு எனக்கு இலங்கை இசையில் ஒப்பற்ற ஒரு கலை ஆளுமையை இழந்ததாக மட்டும் தோன்றவில்லை.

அது நமது வாழ்க்கையோடு நெருக்கமாகி, நமது நினைவுகளுடன் பின்னிப்பிணைந்து, இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் இருந்த ஒரு பழக்கமான குரல் நம்மை விட்டுப் பிரிந்ததாகவே நான் உணர்கின்றேன்.

அன்னாரின் பாடல்கள் எமது தலைமுறையின் வாழ்க்கை அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததுடன், அந்த இனிய குரலுடன் உருவான நினைவுகள் இன்று அவரது பிரிவின் ஊடாக மிகவும் ஆழமாக நினைவுகூரப்படுகின்றன.

பல தசாப்தங்களாக அவரது குரல் நமது வீடுகளிலும், எமது பாடசாலைக் காலத்திலும், எமது விழாக்கள் மற்றும் தேசிய நிகழ்வுகளிலும் அமைதியாக நமது நாளாந்த வாழ்க்கையோடு பயணித்தது.

அவர் பாடிய பல பாடல்கள் வெறும் கேட்கக் கிடைத்த பாடல்கள் மட்டுமல்ல, எமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.

அன்னாரின் இசைப் பயணம் இலங்கை இசைக்கலையில் ஒரு சகாப்தம் மட்டுமல்ல, இந்நாட்டு மக்களின் வாழ்வு, சமூக அசைவுகள் மற்றும் மனித உணர்வுகளின் ஒரு நேரடி வெளிப்பாடாகவும் அமைந்தது.

காதல் மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளைப் பாடுவதற்கும் அப்பால் சென்ற அவர், சாமானிய மக்களின் துயரம், பயம், நம்பிக்கை மற்றும் போராட்டத்தை தனது பாடல்கள் மூலம் ஒரு குரலாக மாற்றினார்.

இதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது அது ஒரு பாடகியின் குரலாக மட்டும் நமக்குத் தோன்றவில்லை, நமது சொந்த சமூகத்தின் குரலாகவே ஒலித்தது.

அவர் ஒருபோதும் சமூகத்திலிருந்து பிரிந்த ஒரு கலைஞராக இருக்கவில்லை. அநீதிக்கு முன் மௌனம் காக்காமல், அமைதி மற்றும் சகவாழ்வுக்காகவும், மனிதநேயம் மற்றும் சமூக நீதிக்காகவும் அவர் அச்சமின்றி தனது குரலை எழுப்பினார்.

நந்தா மாலினி அம்மையாரின் பாடல்களோடு எனக்கும் பல தனிப்பட்ட நினைவுகள் உள்ளன. சில பாடல்களை மகிழ்ச்சி நிறைந்த தருணங்களில் கேட்டுள்ளேன். சில பாடல்கள் வேதனையோடும் அல்லது அமைதியான தருணங்களோடும் பிணைக்கப்பட்டுள்ளன.

மேலும் சில பாடல்கள், நாம் வாழ்ந்த காலம், நாம் சந்தித்த சமூக அனுபவங்கள் மற்றும் நமக்குள் இருந்த நம்பிக்கைகளை நினைவூட்டுகின்றன.

எனவே அவரது குரல் நமக்கு வெறும் இசையாக மட்டும் இருக்கவில்லை. அது நமது வாழ்வோடே பயணித்து, எமது உணர்வுகளைப் புரிந்துகொண்டு, சில சமயங்களில் நமக்காகவே பேசிய ஒரு குரலாக அமைந்தது.

இன்று அன்னாரின் மறைவு குறித்து துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசையிலிருந்து விடைபெற்ற ஈடு இணையற்ற ஒரு கலைஞரைப் பற்றி மாத்திரமன்றி, எமது வாழ்வின் பல நினைவுகளோடு பிணைந்திருந்த ஓர் அன்பான குரலையும் நான் நினைவுகூருகிறேன்.

அவர் விட்டுச்சென்ற பாடல்களின் தொகுப்பும், அவர் கட்டியெழுப்பிய கலைப் பாரம்பரியமும், சமூகத்திற்காக ஒரு கலைஞர் நிறைவேற்றக்கூடிய பொறுப்பு குறித்து அவர் விட்டுச்சென்ற முன்மாதிரியும் எதிர்கால சந்ததியினருக்கும் வழிகாட்டும்.

எதிர்காலத்திலும் அன்னாரின் குரல் ஒரு பாடலாக மாத்திரமன்றி நீதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் இந்த தேசத்தின் மீதான அன்புக்காக எழுந்த ஒரு துணிச்சலான குரலாகவே ஒலிக்கும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular