காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்தின் அச்சக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச அச்சகத்தினர் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான எம்.டீ.ஆர். அதுல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் காரணமாக கடதாசி இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளமையால் , அச்சுத்துறை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் தினங்களில் அரச ஆவணங்களை அச்சிடுவதிலும் பாரிய சிக்கல் ஏற்படும் என்று சங்கத்தின் ஆலோசகர் மேலும் தெரிவித்தார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் , சாதாரண வர்த்தமானி அறிவித்தல்களைக் கூட அச்சிட முடியாத நிலைமை ஏற்படும். மேலும் அமைச்சுக்கள் , திணைக்களங்கள் என்பவற்றுக்கு அவசியமான ஆவணங்களை அச்சிட முடியாத நிலைமை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அபராத விதிப்பு தொடர்பான சீட்டுக்களைக் கூட அச்சிட முடியாத நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி தொடர்பில் அவதானம் செலுத்தி துரித தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அரச அச்சகத்தினர் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான எம்.டீ.ஆர். அதுல தெரிவித்தார்.