வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இறைமை, சர்வஜன வாக்குரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பில் கலந்துரையாடுகின்ற நிபுணர்களின் கட்டுரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது.
அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயகத்திற்கு அஞ்சினால் அந்நேரம் முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் எனவும் தெரிவித்தார்.
1975 தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை, 1982 மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு காரணமாக இளைஞர், யுவதிகள் தேர்தல் முறை பற்றி விரக்தி அடைந்தனர். இதன் விளைவாக, 88/89இல், அறுபதாயிரம் இளைஞர், யுவதிகள் வீதிகளில் கொலை செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இதனை உணர்ந்து, தான் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை குறித்த காலத்திற்கு முன்னரே தேர்தலை நடத்தி வாக்குரிமையை வழங்கியதாக குறிப்பிட்டார்.
வாக்களித்து அரசாங்கத்தை அமைப்பவர்கள் அந்த அரசாங்கங்களை பலப்படுத்தி அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டும் எனவும், தவறுகள் இருப்பின் அவற்றை விமர்சன ரீதியாக சுட்டிக்காட்டி வாக்காளர்களுக்கு பொறுப்புள்ள பிரஜையாக மாற முடியும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா இங்கு தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய அளவுகோல்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச ஊடகங்கள் மட்டுமன்றி தனியார் மற்றும் சமூக ஊடகங்களும் செயற்பட வேண்டும். இல்லை என்றால், ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.