உத்தேச தாதியர் பல்கலைக்கழகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் கல்வியமைச்சுக்களின் அதிகாரிகளுடன் தமது அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாதியர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நகல் சட்டமூலத்தை விரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அங்கு பணிப்புரை வழங்கினார்.
உயர்திறன் மிக்க சர்வதேச மட்டத்திலான தாதி உத்தியோகத்தர்களை நாட்டில் உருவாக்குவது இதன் நோக்கமாகும். இவ்வாறான பல்கலைக்கழகம் ஒன்றை நாட்டில் ஆரம்பிப்பது சுகாதார மற்றும் கல்வித்துறைகளுக்கு விசேட திருப்பு முனையாக இருக்கும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கியுள்ள ஓர் உறுதிமொழியாகும். தற்போது நாட்டில் உள்ள 6 பல்கலைக்கழகங்களில் தாதியர் பட்டப் பாடநெறி இடம்பெறுகின்றது. இதுதவிர 17 கல்லூரிகள் ஊடாக தாதிப் பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது.