வெல்லவாய பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்கும் அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெல்லவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று(01) எல்லவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் தந்தையும், இரு பிள்ளைகளும், ஒரு மாதத்திற்கு முன் மேலும் மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில், இந் நீர்வீழ்ச்சியில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நீர்வீழ்ச்சிப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய, பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வேலைத்திட்டம் நிறைவு பெறும் வரை, இந் நீர்வீழ்ச்சிப் பிரதேசம் முற்று முழுதாக தடை செய்யப்பட்ட பிரதேசமாக மாற்றியுள்ளதாக வெல்லவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்துள்ளார்.