இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இரணைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) மன்றில் முன்னிலையாக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பான வழக்கு, கிளிநொச்சி நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் மீனவர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதுடன், மீனவர்கள் சார்பில் இந்திய தூதரக அதிகாரியொருவர் சட்டத்தரணியூடாக ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில், குறித்த 12 மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாக்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.
Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்களை கிளிநொச்சி இரணைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் கடந்த 12 ஆம் திகதி இரவு கைது செய்தனர்.
இவர்களது 2 ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் இதன்போது கைப்பற்றப்பட்டன.
இராமேஸ்வரத்தை சேர்ந்த இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.