எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கில், தடுப்பூசி செலுத்தல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கர்ப்பிணித் தாய்மார்கள், தாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கோ அல்லது தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கோ சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கர்ப்பிணித் தாய்மார்கள், 23 ஆம் திகதிவரை காத்திருக்காமல், தங்களது பிரதேசத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு சென்று அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு, குடும்பநல சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாலூட்டும் தாய்மார், தடுப்பூசி செலுத்திக்கொள்ள எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால், தாய்க்கும், சேய்க்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
அத்துடன், தாய்மார்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட உடனேயும் குழந்தைக்கு பாலூட்ட முடியும்.
தாய்ப்பாலூட்டலுக்கும், தடுப்பூசி ஏற்றத்திற்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை.
தாயொருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலும், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய, குழந்தைக்கு பாலூட்ட முடியும் என்றும் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.