இலங்கையின் அகழ்வு இடங்கள் புனரமைப்பது குறித்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜி.எஸ்.எம்.பி.நிறுவனமே குறித்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது.
நாடு பூராகவும் உள்ள அகழ்வு இடங்களை முறையாக புனரமைக்காமை குறித்து தமக்கு ஒரு வாரத்திற்குள் ஆய்வறிக்கையை பெற்றுத்தருமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் தலைவருக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய அகழ்வு மற்றும் புனரமைப்பு இடங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அமைச்சரிடம் வழங்கப்பட்டது. இவ்வறிக்கைக்கு அமைய 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் புனரமைக்கப்படாத 950 அகழ்வு இடங்கள் இனங்காணப்பட்டதுடன் தற்போது புனரமைக்கப்பட்டுள்ள 2491 அகழ்வு இடங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதையடுத்து குறித்த இடங்கள் உரிய முறையில் புனரமைக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவ்வாறான நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு மீண்டும் அனுமதி பத்திரங்களை வழங்காதிருக்கவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.