முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது கொள்வனவுக்கான கட்டளைகள் சமர்பிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அவற்றை உடனடியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் சேவைகள், ரயில்வே மற்றும் மோட்டார் தொழிற்றுறை அமைச்சுக்களின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது, 160 ரயில் பெட்டிகளுக்கான கொள்வனவுக் கட்டளைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 120 ரயில் பெட்டிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 40 பெட்டிகள் மாத்திரமே போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்படாத ஏனைய பெட்டிகளை உடனடியாகச் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இக்கூட்டத்தின் போது ஜனாதிபதி, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
போக்குவரத்துச் சேவையில் இணைக்கக்கூடிய வகையில் இருப்பினும் சேவைக்குப் பயன்படுத்தப்படாதுள்ள பஸ்களைப் பழுதுபார்த்து, குறுந்தூரச் சேவைகளுக்குப் பயன்படுத்துமாறும் அதன் மூலம், கிராமிய மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிட்டுமென்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுடன் நட்புணர்வுடன் பணியாற்றுவதன் மூலம், போக்குவரத்துக் கட்டமைப்பிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமென்றும் ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மக்களை ஒடுக்கும் தொழிற்சங்கப் போராட்டங்களை நிறுத்துவதற்கு, அனைத்துத் தரப்பினரும் புரிந்துணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
உல்லாசப் பயணிகளை இலக்குவைத்து, சுற்றுலாப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் பயணிகள் சேவையை முன்னெடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
தற்போது சேவையில் அதிகப்படியான ஊழியர்கள் காணப்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளதென்று அதிகாரிகள் எடுத்துரைத்த போது, எந்தவோர் ஊழியரையும் பணிநீக்கம் செய்யாது, உரிய பயிற்சிகளை வழங்கி, அவர்களிடமிருந்து அதிகபட்ச சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான முறைமையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் பிரச்சினை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்வரும் காலத்தில் பொதுப் போக்குவரத்துக்காக 100 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும், இதன்போது நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
போக்குவரத்துச் சேவை தொடர்பில் பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அவதானம் செலுத்தி, தரமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கு அனைவரும் உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.