இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான வீசாக்களினதும் செல்லுபடி காலம் நேற்று முதல் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப்பிரிவிற்கான வீசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என்பதோடு எந்தவித தண்டப்பணமும் அறவிடப்பட மாட்டாது என்று குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு சுற்றுலா வீசா வைத்திருப்பவர்களுக்கு வீசாவை நீடித்துக் கொள்வதற்கான வீசா கட்டணங்களை செலுத்துவதற்கும் வீசாவை மேலொப்பமிட்டுக் கொள்வதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வதிவிட வீசாவை வைத்திருப்பவர்கள் அதன் திகதியை நீடித்துக் கொள்ள கிழமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 070 – 7101050 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதோடு, செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.