சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் மற்றும் பல்கலைக்கழகத்தின் புதிய நுழைவாயில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு இதுவரை காணப்பட்ட பாதுகாப்பு, மருத்துவம், பொறியியல், சட்டம், சுகாதாரம், முகாமைத்துவம், சமூகவியல் மற்றும் மானுடவியல், கணினி, சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி ஆகிய ஒன்பது பீடங்களுக்கு மேலதிகமாக, தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
எமது அரசாங்கங்கள் எப்போதும் கல்வி குறித்து விசேட கவனம் செலுத்தி வருகின்றன. உயர்கல்வி, பல்கலைக்கழக அமைப்பு மற்றும் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் உழைத்தோம். அதனால்தான் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஜனாதிபதியாக இருந்த போது இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தினேன்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரண்டு முறை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளேன்.
இலங்கையை தெற்காசிய வலய கல்வி மையமாக மாற்றுவதே எமது அரசாங்கங்களின் கொள்கை.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, பல்கலைக்கழக கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதும் ஆகும். அதன்படி, கடந்த ஆண்டு அரசுப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தோம் என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.