நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறை முதலாளிகள் தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கையின் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் சேவைகள் மற்றும் உற்பத்தி துறையினருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது. சுங்க கட்டணம் அதிகரிப்பு, கொள்கலன்கள் வருவது குறைந்துள்ளமை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் பிரச்சினைகள், அதற்காக செலவிட வேண்டிய பணம், வங்கிகளில் அறவிடப்படும் அதிக வட்டி போன்ற பிரச்சினைகளை தனியார் துறையினர் தொழில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனாலும் நிலவும் பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் கொடுப்பனவுகளை வழங்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தனியார் துறை முதலாளிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.