பெண்களை முழு ஆற்றலுடன் மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கக் கூடிய வகையிலான Wise Woman தேசிய வேலைத்திட்டம், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(04) ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் பெண்களின் சனத்தொகை 52 சதவீதம் ஆகும். ஆனால், மொத்தச் சனத்தொகையில் தொழிற்படைக்கான பெண்களின் பங்களிப்பு 30 சதவீதமென்ற குறைந்தளவு வீதத்திலேயே இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கான திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்கி, அதன் மூலம் அவர்களைத் தேசிய பொருளாதாரத்துக்குப் பங்களிக்கச் செய்வதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் மூலம் இது செயற்படுத்தப்படுகிறது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களித்த பேராசிரியர் நிலீகா மளவிகே, கலாநிதி ஆஷா டி வொஸ், கஸ்தூரி வில்சன், நிபுனி கருணாரத்ன, மெலனி வகஆரச்சி, பவித்ரா குணரத்ன, ரங்கனா வீரவர்தன, அயந்தி குணசேகர, நெல்கா ஷிரோமாலா மற்றும் திலங்கா அபேவர்தன ஆகியோர், ஜனாதிபதி கரங்களினால் சிறந்த பெண்மணிகளாக விருது பெற்றனர்.
எமது நாட்டில் பெண்களைப் பலப்படுத்தும் போது, அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்வதில் எவரும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படவேண்டிய நிலைமை ஏற்படாதென, திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.