மிரிஹான, ஸ்டான்லி திலகரத்ன மாவத்தையில் உள்நாட்டு பால் மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில், குறித்த பால் மா நிறுவனத்தின் தலைவருடன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நேற்று கலந்துரையாடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் பால் மாவை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பால் மா நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பொலிஸாரின் தலையீட்டில் மிரிஹான பகுதியில் கலைக்கப்பட்ட, பால் மாவிற்காக ஒன்று கூடிய மக்களின் வரிசை இன்று மீண்டும் ஒன்று திரண்டது.
பால்மா உற்பத்தி நிறுவனத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் கலைக்கப்பட்டனர். டோக்கன் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய பொலிஸார், இன்று டோக்கனை பெற்றுக்கொண்டு, பால் மாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிவித்துள்ளனர்.