டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகளின் கலவையானது, கொவிட் எண்ணிக்கையில், ஆபத்தான பேரலையை உருவாக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது, சுனாமி போன்று ஆபத்தான பேரலை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் அதிகளவான புதிய நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் அதிகமான நாளாந்த நோயாளர் எண்ணிக்கையாக, 2 இலட்சத்து 8 ஆயிரம் பேர் ஃப்ரான்ஸில் பதிவாகியுள்ளனர்.
ஜோன்ஸ் ஒப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டென்மார்க், போர்த்துக்கல், ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலிய முதலான நாடுகளில், அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போதைய நிலையில், சர்வதேச ரீதியில் நாளாந்தம் சுமார் 9 இலட்சம் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், இது இரண்டு வகையான திரிபுகளினதும் இரட்டை அச்சுறுத்தல் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் எச்சரித்துள்ளார்.
இது சோர்வுற்றுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீதும், சுகாதாரக் கட்டமைப்புகளின் மீதும் அதீத அழுத்தத்தைப் பிரயோகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.