“பலசரக்குத் தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின்” மாதிவெல கிளை மீது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அவதானம் செலுத்தப்பட்டது.
“கிராமத்துடன் கலந்துரையாடல்” வேலைத்திட்டத்துக்காக மீமுரே பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பிரதேசவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விற்பனைச் சபையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன்படி, தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பதற்கான தீர்வாக கடந்த ஓகஸ்ட் மாதம் பலசரக்கு சந்தைப்படுத்தல் சபை ஸ்தாபிக்கப்பட்டது.
பத்தரமுல்ல, மாதிவெல, நுகேகொட, பம்பஹின்ன, இரத்தினபுரி, கலவான, கிரிஎல்ல, கொடாமுல்ல மற்றும் பல்லேபெத்த ஆகிய நகரங்களில் நான்கு மாத குறுகிய காலப்பகுதியில் 10 கிளைகளை மசாலா சந்தைப்படுத்தல் சபை நிறுவியுள்ளது. இதன் 11ஆவது கிளை எதிர்வரும் 31ஆம் திகதி செவனகல நகரில் திறக்கப்படவுள்ளது.
நைஜீரியா, பிரான்ஸ், ரஷ்யா, கலிபோர்னியா, பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உள்ளூர் பலசரக்குப் பொருட்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏற்கெனவே கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
தற்போது, மாதமொன்றுக்கு இருபது மில்லியனுக்கும் அதிகமான உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதோடு, பலசரக்கு சந்தைப்படுத்தல் சபையானது, எதிர்காலத்தில் நாடு முழுவதும் அதன் கிளை வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.