உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் நாட்டில் இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளை மீண்டும் நிலைநிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்பி வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ள ரஜமகா விஹாரையில் இன்று (25) பிற்பகல் தங்கவேலிகளுடன் கூடிய போதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ரங்கிரி தம்புள்ள ராஜமகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதியை திறந்து வைத்து, முதலில் மலர்களை வைத்து வழிபட்டார்.
பின்னர் போதி திறப்பு விழாவிற்கான விகாரையின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சட்டத்தின் மூலம் மாத்திரம் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். அங்கு, மதத் தத்துவத்திற்கு ஒரு பாரிய சமூக வகிபாகம் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கிராமத்தின் விகாராதிபதி உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு அந்தப் பணியில் முதன்மையான பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டிற்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தில் அறிவார்ந்த மற்றும் நல்லொழுக்கத்தால் போசிக்கப்பட்ட எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்காக, கல்வித் துறையில் விரிவான மாற்றத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோன்று, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்றுவதற்காக, திட்டமிட்ட வகையில் செயற்படும் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.